சின்னக்குப்பம் என்ற ஊரில் சின்னசாமி என்னும் பெயருடைய ஒரு செல்வந்தர் வசித்து வந்தார். அவருக்கு அவருடைய தந்தை ஏராளமான செல்வத்தை சேர்த்து வைத்திருந் தார். சின்னசாமி இளமையிலேயே வறுமையில் வாடுபவர்களிடம் பாசமும், பரிவும் கொண்டவர். பசியுடன் யாரையாவது பார்த்து விட்டால், உடனே அவர்கள் பசியைப் போக்க அவர்களுக்கு வயிறு நிறைய உணவளிப்பார்.
சின்னசாமி நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவர். அவர் விரும்பி படித்த புத்தகங்கள் அனைத்தும் அவரை நல்வழிப் படுத்தியதோடு இந்த உலக வாழ்க்கை நிலையில்லாதது என்பதை உணர வைத்தது. அவர் தந்தை, அவருக்கு சேர்த்து வைத்த சொத்து முழுவதையும், உறவினர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் தானமாக அளித்து விட்டு, ஊருக்கு வெளியே ஒரு சிறு குடிசை வீடு கட்டிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல், தனியாக வசித்து வந்தார்.
சின்னசாமி கூறும் அறிவுரைகளைக் கேட்க, அவர் குடிசையைச் சுற்றி எப்போதும் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும். சிறுவர் முதல் பெரியவர் வரை அவர் குடிசையை தேடி வந்தவாறு இருப்பர். சின்னசாமி தன் சொத்து முழுவதையும் தானம் செய்து விட்டதால், தன்னுடைய அன்றாட செலவுகளுக்கு தேவைப்படும் பணத்தை சம்பாதிக்க, தனக்கு மிகவும் தெரிந்த ஒருவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து, பயிரிட்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் தன் தேவைக்கு சொற்ப தொகையை எடுத்துக் கொண்டு, மீதியை ஏழை எளியோருக்கு உதவி செய்து வந்தார்.
ஒருநாள் சின்னசாமி வீட்டின் முன்னே பெரியோர், சிறியோர் மற்றும் பெண்களும் கூடி இருந்த கூட்டத்தில், மன்னனும் மாறுவேடத்தில் அமர்ந்திருந்தான். அப்போது சின்னசாமி கூட்டத்தைப் பார்த்து, ""இந்த உலகத்தில் நாம் காணும் அனைத்து பொருட்களும், உண்மையல்ல, எல்லாமே மாயை,'' என்று கூறினார்.
பிறகு அவர், ""இன்றைக்கு இருப்பவர்கள் நாளைக்கு இல்லை. எந்த பொருளும் யாருக்கும் எப்போதும் சொந்தம் இல்லை. ஒரு பெண் பிள்ளை திருமணம் செய்துக் கொண்டு கணவன் வீடு செல்லும் வரை அவள் பெற்றவர்களுக்கு சொந்தமாக இருக்கிறாள். திருமணம் முடிந்து கணவன் வீடு சென்ற உடன், அவள் கணவனுக்கு சொந்தமாகி விடுகிறாள். வாழ்க்கையே ஏற்றத் தாழ்வு நிறைந்தது தான். இன்றைக்கு பணக்காரனாக இருப்பவன், நாளைக்கு ஏழையாகிவிடுகிறான். இன்றைக்கு ஏழையாக இருப்பவன், நாளைக்கு பணக்காரனாகி விடுகிறான். உலகத்தில் யாருமே நிரந்தரமாக பணக்காரனாகவோ, ஏழையாகவோ இருப்பதில்லை.
""மரம் நட்டு தண்ணீர் ஊற்றி வளர்ப்பவர் அதன் பலனை அனுபவிப்பதில்லை. மரம் நட்டவர், அது பலன் தரும் காலத்தில் உயிரோடிருப்பதில்லை. மரம் நட்டவரின் வாரிசுகள் தான் பலனை அனுபவிக்கின்றனர்.
""இன்றைக்கு பல பெரிய பணக்காரர்களுக்கு சொந்தமாக இருக்கும் அரண்மனை போன்ற மாளிகைகள், நாளைக்கு வேறு ஒருவருக்கு சொந்தமாகி விடும். உலகில் நாம் கண்டு அனுபவிக்கும் அத்தனை பொருட்களும் யாருக்கும் நிரந்தரமானது அல்ல. அது காலத்தின் சுழற்சியில் மாறிக்கொண்டே இருக்கும். ""அதனால் எப்போதும் எந்த பொருளுக்கும் ஆசைப்படக் கூடாது. நமக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும். ஆகையால், நாம் எல்லோரும் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ளாமல், வாழ கற்றுக் கொள்ள வேண்டும்,'' என்று அறிவுரைகள் கூறினார் சின்னசாமி.
மாறுவேடத்தில் இருந்த அரசன், சின்னசாமி கூறியவைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். அவர் இதுவரை, சின்னசாமி கூறிய அறிவுரைகளைப் போல் வேறு யாரும் கூறக் கேட்டதில்லை. அரசனுக்கு சின்னசாமி கூறிய ஒரு தத்துவம் மட்டும் சரியாக புரியவில்லை. இன்றைக்கு பல பெரிய பணக்காரர்களுக்கு சொந்தமான அரண்மனை போன்ற மாளிகைகள், நாளைக்கு வேறு ஒருவனுக்கு சொந்தமாகி விடும் என்று சின்னசாமி கூறியதை அரசனால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.
சில நாட்களுக்கு பிறகு சின்னசாமி தனியாக அரண்மனை இருக்கும் ராஜவீதி வழியாக சென்றுக் கொண்டிருந்தார். உப்பரிகையில் நின்றுக் கொண்டிருந்த அரசர் சின்னசாமியைப் பார்த்து விட்டு, அவரை சந்திக்க கீழே இறங்கி வந்தார்.
அரசர் சின்னசாமியைப் பார்த்து, ""ஐயா! தாங்கள் ஒருநாள், தங்கள் குடிசையின் முன்னால் கூடி யிருந்த மக்களுக்கு, அறிவுரைகள் சொல்லும் போது, இன்றைக்கு பல பெரிய பணக்காரர்களுக்கு சொந்தமான அரண்மனை போன்ற மாளிகைகள், நாளைக்கு வேறு ஒருவனுக்கு சொந்தம் என்று கூறிய தத்துவம் புரியவில்லை. அதைப் பற்றி தயவு செய்து விளக்கமாக கூறுங்கள்,'' என்று கேட்டார் அரசர்.
அரசர் கூறியதைக் கேட்ட சின்னசாமி புன்னகைத்தவாறே, அரசனைப் பார்த்து, ""நீங்கள் இப்போது வசித்துக் கொண்டிருக்கும் அரண்மனை நீங்கள் கட்டியதா?'' என்று கேட்டார்.""நான் கட்டவில்லை. என் தந்தை கட்டியது,'' என்று கூறினான்.
"""நீங்கள் இந்த அரண்மனையைக் கட்ட வில்லை. ஆனால், இன்றைக்கு இந்த அரண்மனைக்கு நீங்கள் சொந்தக்காரராக இருக்கிறீர்கள். உங்களுக்கு முன்னால் இந்த அரண்மனையின் சொந்தக்காரர் யார்?'' என்று சின்னசாமி கேட்டார்.
""அரண்மனையை கட்டிய என் தந்தை தான் சொந்தக்காரர்,'' என்று கூறினான்.
"
"ஒரு காலத்தில் உங்கள் தந்தைக்கு சொந்தமாக இருந்த அரண்மனை இன்று உங்களுக்கு சொந்தம், நாளைக்கு உங்கள் மகனுக்கும் சொந்தம். இதைத்தான், நான் அன்று என் குடிசை முன்னால் இருந்த கூட்டத்தில், இன்றைக்கு பல பணக்காரர்களுக்கு சொந்தமாக உள்ள அரண்மனை போன்ற மாளிகைகள், நாளைக்கு வேறு ஒருவருக்கு சொந்தமாகி விடும் என்று கூறினேன்,'' என்றார் சின்னசாமி.சின்னசாமி கூறிய தத்துவத்தை புரிந்துக் கொண்ட அரசன், தன் காவலர்களை அழைத்து, சின்னசாமிக்கு அளிக்க நிறைய பொன்னும், மணியும் கொண்டு வரும்படி கட்டளை யிட்டான்.
சின்னசாமி உடனே, அரசனை வணங்கி, ""அரசே! இதுபோன்ற பொன்னும், மணியும் தேவையில்லை என்றுதான் என் தந்தை எனக்கு விட்டுச் சென்ற சொத்து முழுவதையும் தானம் செய்து விட்டு, உழைத்து சாப்பிடுவதோடு, மீதி இருக்கும் பணத்தை தர்மம் செய்து கொண்டிருக்கிறேன்,'' என்று கூறியவாறே நடந்து சென்றான். பொன்னும், மணியும் தேவையில்லை என்று உதறிவிட்டு செல்லும் சின்னசாமியை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அரசர்.