ThirudaN Chat Forum

தமிழ் அரங்கம் => கதைகள் மற்றும் நாவல்கள் => Topic started by: Administrator on May 01, 2024, 03:28 PM

Title: மனம் தளராதே -|எறும்பு கதை
Post by: Administrator on May 01, 2024, 03:28 PM
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.


அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.

பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.