குருகுலம் ஒன்றை நடத்திய
குருவுக்கு தேவை செல்வம்;
சென்றார் அரசனிடம் அவர்
செல்வம் பெற எண்ணியபடி.
அரசன் பூஜையில் அமர்ந்து,
பரம பக்தியுடன் இறைவனை
அர்ச்சனை செய்ததும், பின்னர்
அவனை இறைஞ்சியதும் கேட்டது.
குரு வெளியே போகலானார்,
சிரித்தபடியே தனக்குள்ளேயே.
குருவைத் தடுத்து நிறுத்தினான்,
அரசன் மிகவும் திகைப்படைந்து!
"வந்த விஷயத்தை நீங்கள்
எந்த முறையிலும் சொல்லாமல்
சென்றால் எப்படி?" என்று மேலும்
மன்றாடிக் கேட்டுக் கொள்ளவே,
குறு நகை புரிந்தார் அந்த குரு;
புரியாத அரசன் திகைத்தான்!
நடந்ததை அவர் கூறியபோது,
மடமையை அவன் உணர்ந்தான்!
"குருகுலம் நடத்த உன்னிடம்
பொருள் பெறவேண்டி வந்தேன்;
பொருள் பெற வேண்டி, நீயே
இறைவனிடம் யாசித்தாய்!
ஒரு யாசகனை நாடி வந்து,
ஒரு யாசகன் என்ன கேட்பது?
உன்னிடம் கேட்பதைவிடவும்
உலகை ஆள்பவனிடம் கேட்பேன்"
இவர்களுள் யார் நிஜ யாசகன்?
அரசனா அல்லது அந்த குருவா?
இறைவன் முன்பு இங்கு வாழும்
அனைவருமே நிஜ யாசகர்களே!