Recent posts

#81
உலகம் சுற்றும் அலிபாபா: ஜூனியர் லயன் காமிக்ஸின் முதல் இதழாக வந்த சூப்பர் சர்க்கஸ் இதழின் பின் அட்டையில் வந்த விளம்பரம் தான் அலிபாபா முஸ்தபாவை தமிழ் காமிக்ஸ் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது. அந்த பின் அட்டை விளம்பரமும், அலிபாபா முஸ்தபாவின் முதல் சாகசமாகிய உலகம் சுற்றும் அலிபாபாவின் அட்டைப்படமும் ஸ்கான் வடிவில் உங்களின் பார்வைக்கு.

அப்போதெல்லாம் மினி லயன் ஒன்றாம் தேதியிலும், ஜூனியர் லயன் பதினைந்தாம் தேதியிலும் விற்பனைக்கு வந்தன.இதைப்போலவே தான் லயனும், திகில் காமிக்சும் 1 & 15ம் தேதிகளில் வந்தன. மாதத்திற்கு நான்கு சிறப்பான புத்தகங்கள் என்பது என்ன மாதிரியான சாதனை என்பதை யோசிக்கையிலேயே மலைப்பாக இருக்கிறது. மேலும் இந்த சாதனையை செய்தது ஒரு டீனேஜர் என்பது இன்னமும் வியக்க வைக்கும் ஒரு விஷயம். புத்தகம் கைவசம் இல்லாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்காக இந்த முதல் பக்க ஸ்கான் + மூலக்கதை புத்தகத்தின் முதல் பக்க ஸ்கான்லேஷன்.



உலகம் சுற்றும் அலிபாபா - கதை சுருக்கம்: எதேச்சையாக ஒரு விளக்கு நமது ஹீரோக்கள் கைவசம் கிடைக்க அதனை துடைக்கும் போது அதில் இருந்து அலாவுதீனின் வயதான பூதம் வெளியே வந்து, நீங்கள்தான் இனிமேல் என்னுடைய முதலாளி, நீங்கள் இடும் கட்டளையை நிறைவேற்றுவதே என்னுடைய தலையாய பணி என்று சொல்கிறது.

வியந்து போன நமது ஹீரோக்கள், வியாபாரம் செய்ய ஒரு கப்பலை கேட்கின்றனர். சாப்பாட்டு பிரியனான முஸ்தபா "நிறைய பதார்த்தங்களுடன் கூடிய" ஒரு கப்பலை கேட்க, பூதமோ ஆழ்கடலில் நிறைய செடி கொடிகளுடன் மூழ்கி இருந்த ஒரு பழைய கப்பலை தருவிக்கிறது. அந்த கப்பலை அடையாளம் கண்டு கொள்ளும் ஒரு கொள்ளைக்கும்பல் தங்களது உளவாளி ஒருவனை அந்த கப்பலில் நமது ஹீரோக்களுடன் அனுப்ப, அவனது பாடாவதி சமையலை சகித்துக்கொள்ளும் அலிபாபா, சகிக்க முடியாத அளவிற்கு இருக்கும் சில ரகசியங்களை தெரிந்து கொள்ளும்போது அறிமுகம் ஆகிறார் எதிர் நாயகன் கருந்தேள் (எ) அமீன் பிரபு..

அந்த ஃப்ளாஷ் பேக் என்ன?
அந்த கப்பலில் இருக்கும் ரகசியம் என்ன?
சிறைபட்ட நமது ஹீரோக்கள் கதி என்ன?
பூதம் இந்த நேரத்தில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறது?

கடைசி கேள்விக்கு மாத்திரம் நான் பதில் சொல்லி விடுகிறேன் - குடி போதையில் உளறி அட்டகாசம் செய்த பூதத்தை வெளியே வராதமாறு இறுக்கமாக விளக்கில் அடைத்து விடுகின்றனர் நமது ஹீரோக்கள்.அதற்க்கு பிறகுதான் அவர்கள் கொள்ளையர் கூட்டதால் சிறை பிடிக்கப்படுகின்றனர்.



அப்போதைய ஜூனியர் லயன் காமிக்ஸ் இதழ்களில் தொடர்ச்சியாக வாசகர் கடிதம் இடம் பெறாததால் இந்த இதழுக்கு என்ன மாதிரியான வரவேற்ப்பு கிடைத்தது என்பதை துல்லியமாக சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த கதையை புதிய இதழாக கடைகளில் வாங்கிய "அங்கிள்" காமிரேட்டுகள் சிலரிடம் கேட்டபோது, இந்த புத்தகமும் முதல் இதழான (லக்கி லுக் சாகசம்) சூப்பர் சர்க்கஸ் போலவே ஒரு மெகா ஹிட் இதழ் தான் என்று கற்பூரம் ஏற்றாத குறையாக சொன்னார்கள். இந்த இதழின் வெற்றி எப்படிப்பட்டது என்பதை எடிட்டர்தான் கூற வேண்டும்.

ஏற்கனவே போன பத்தியில் சொன்னது போல ஆரம்பகால ஜூனியர் லயன் இதழ்களில் இடப்பற்றாக்குறை என்பது மிகையாகவே இருந்தது. கதைகள் சற்று பெரியதாக இருந்தால் வாசகர் கடிதம் மட்டுமில்லாமல் அடுத்த இதழுக்கான விளம்பரம் கூட மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே வெளிவந்தது. அலிபாபா முஸ்தபா தொடரில் இரண்டாவது கதைக்கான விளம்பரம் வெறும் வார்த்தைகளாலேயே அலங்கரிக்கப்பட்டு வந்தது. அதுவும் மற்றும் புத்தகத்தின் அட்டையும் உங்களின் பார்வைக்கு:
#82

ஒரு ஞானி இருந்தார். அவரிடம் குடும்பஸ்தர் ஒருவர் வந்தார்.
தான் ஞானம் பெற விரும்புவதாகவும் தாங்களே குருவாக இருந்து ஞானத்தில் சிறந்த ஞானம் எதுவோ அதை தெரிவிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்...!

உபதேசம் மூலம் ஞானத்தை இந்த குடும்பஸ்தருக்கு அறிய வைக்க முடியாது என ஞானி அறிந்தார்

தினமும் உன் வீட்டின் முன்னால் திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்திருக்கும்படியும் அந்த வழியாக சலவை தொழிலாளி கழுதையின் மீது பொதிகளை ஏற்றி வருவார் என்றும், காலையில் ஏற்றி வரும்போதும் மாலையில் திரும்பும்போதும் அதனை கவனிக்கும் படியும் கூறினார்

மறுதினம் பொழுது புலர்ந்தது குடும்பஸ்தர் திண்ணையில் அமர்ந்தார் சலவை தொழிலாளி அழுக்கு பொதிகளை கழுதை மேல் ஏற்றி வந்தார். மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளையும் ஏற்றி சென்றார்.

மறுநாள் ஞானியிடம் சென்றான், நீங்கள் சொன்னது போல் காலையிலும் மாலையிலும் கழுதைகள் சென்றதையும் திரும்பியதையும் கவனித்தேன், ஆனால் அதில் ஞானம் தொடர்பான செய்தி இருப்பதுபோல் தெரியவில்லையே எனக் கூறினான்.

"அன்பனே குடும்பஸ்தானே!.... காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளை சுமந்து சென்றன. அப்போது "அழுக்கு துணிகளை சுமக்கிறோம் என்ற வருத்தம் இல்லை." அதே போல் மாலையில் "சலவை செய்த துணியை சுமக்கிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை" துன்பம் வரும்போது அதிகள் துன்பம்மின்மையும் இன்பம் வரும்போது அதிக சந்தோசம் இல்லாமலும், இன்பம் துன்பம் இரண்டையும் நடுநிலையான மனதுடன் என்று கொள்ள வேண்டும். இதுவே சிறந்த ஞானம்.

இந்த செய்தியையே அந்த கழுதைகள் மூலம் தரும் ஞானம் என்றார்.
#83
"ஒரு காட்டுல யானைக் குட்டி இருந்தது. அதுக்குத் தான் பெரிய ஆள்ன்னு நினைப்பு, தினமும் காட்டுல நடந்துக்கிட்டே தும்பிக்கைக்கு எட்டுகிற மரக் கிளைகளை ஒடிச்சு சாப்பிட்டுக்கிட்டே போகும். அப்படி ஒரு நாள் ஒரு மரத்தை நெருங்கினப்ப, அங்கே இருந்த சிட்டுக்குருவி கையை ஆட்டி, 'வணக்கம் யானை நண்பா' என்று கூறியது"




அதை கேட்ட யானைக்குட்டி அலட்சியமாக சொன்னது
'உன்னோட உருவம் எவ்வளவு? என்னோட உருவம் எவ்வளவு? நாம எப்படி நண்பர்களா இருக்க முடியும்?"

உடனே குருவி பதில் சொன்னது'

'ஏன் முடியாது. நட்புக்கு உருவம் முக்கியம் இல்லை. மனசு தான் முக்கியம், நான் இந்த மரத்தில் ரொம்ப நாட்களாக இருக்கேன். நீ இதை ஒடிச்சேன்னா, நானும் இங்கே இருக்கிற மற்ற பறவைகளும் எங்கே போவது? " என்று கேட்டது.

"அதுக்கு யானை கேலியான குரலில் சொன்னது,
இந்த மரம் உங்களுக்கு வேணும்னா வீடா இருக்கலாம் ஆனா எனக்கு இது தான் சாப்பாடு" என்றது

அதைக்கேட்ட குருவி சொன்னது

"அப்படின்னா நமக்குள்ளே ஒரு போட்டி வைத்துக்கொள்ளலாம். அதில் நீங்கள் வெற்றி அடைந்தாள் , இந்த மரத்தின் கிளைகளை உடைத்து சாப்பிட்டுகொள் நான் வெற்றி அடைந்தாள் மரத்தை ஒடிக்க்கூடாது' என்றது சிட்டுக்குருவி.

'பொடிப் பயல் உன்னோடு போட்டியா? சரி சொல்லு' என்றது யானைக் குட்டி.

"நாம ரெண்டு பேரும் அந்த மலை வரைக்கும் பறக்கணும். யார் முதலில் அங்கே போய்ச் சேர்கிறோமோ, அவங்கதான் வெற்றி அடைந்த மாதிரி" என்றது சிட்டுக்குருவி.

யானை தன்னாலே பறக்க முடியாதுனு தெரிஞ்சாலும் வீம்புக்காக இவ்வளவு தானா பறந்துட்டா போகுது என்று போட்டிக்கு ஒப்புக் கொண்டது

போட்டி ஞாயிற்றுகிழமை காலை நடைபெறும் என்று நாள் முடிவு செய்யப்பட்டது, இப்போ யானைக்கு ஒரு பிரச்சனை, நாலு நாளைக்குள்ளே எப்படியாவது பறக்க கற்றுக் கொள்ள வேண்டும், என்ன செய்வது, யாரிடம் கற்றுக் கொள்வது என குழம்பியது

பறக்கிறது என்பது பெரிய விஷயமா என்ன, லேசாக கத்துக் கொள்ளலாம் என்று நினைத்த யானை வழியிலே ஒரு கோழியை பார்த்தது

"கோழி கோழி, எனக்கு ஒரு உதவி செய்யணும், நான் எப்படியாவது பறக்கணும். அதுக்கு ஒரு வழி சொல்லு" என்றது.

அதைக்கேட்ட கோழி சொன்னது "அது ரொம்ப சுலபம் அண்ணே. நான் என்ன செய்றேன்னு கவனி! அதே மாதிரி செய்தேன்னா நீயும் பறக்கலாம்" என்றது.
யானையும் ஒத்துக் கொண்டது

கோழி அங்கே இருந்த ஒரு பாறை மேலே ஏறி நின்னுகிட்டு சடசடனு. இறக்கை அடித்தபடியே தாவியது, சில நொடிகள் அந்தரத்தில் பறந்தவாறு கீழே வந்து சேர்ந்துச்சு. 'இவ்வளவு தான், சுலபம், எங்கே நீ பற பாக்கலாம்' என்றது.

யானையும் கஷ்டப்பட்டு பாறை மீது ஏறி நின்று கோழி மாதிரி காலை விரிச்சிகிட்டு தாவியது, அவ்வளவு தான், தொபுக்கடீர்னு கீழே விழுந்து நல்ல அடி, தொப்பை கலங்கி போச்சு,


.யம்மா, யப்பானு கத்திகிட்டே டேய் பறக்குறதுக்கு வழி கேட்டா இடுப்பை முறிக்குறதுக்கு வழி சொல்றேனு சொல்லிகிட்டே எழுந்து நின்னுச்சி,


எங்கே யானை தன்னை அடித்துவிடுமோ என்று பயந்து போன கோழி ஒரே ஓட்டமா ஓடிப்போனது.


யானை வலியோடு சே, அவசரப்பட்டு போட்டிக்கு ஒப்புக்கிட்டோமோ? , சிட்டுக் குருவியிடம் தோற்கக் கூடாது. எப்படியும் ஜெயிச்சுடணும்'னு நினைச்சது.


அப்போ, அந்தப் பக்கமாக ஒரு காகம் பறந்து வந்தது. அதை நிறுத்திய யானை, விஷயத்தைச் சொல்லிச்சு. யானையை மேலே இருந்து கீழே வரைக்கும் பார்த்த காகம், 'உன்னோட வெயிட்தாண்ணே பிரச்னையே. நாலு நாள் சாப்பிடமா கிடந்தால் நல்லாப் பறக்கலாம்' என்று சொல்லிவிட்டுப் பறந்துபோச்சு."


யானை எதுவும் சாப்பிடாமல் பட்டினிகிடந்து நாலு நாள்ல வாடி வதங்கிப் போச்சு, எழுந்து நிக்கவே முடியலை, சரி எப்படியாவது பறந்து பாக்கலாம்னு தாவினா கண்ணை கட்டிகிட்டு மயக்கம் வந்து விழுந்திருச்சி,

காக்கா பக்கத்தில வந்து உட்கார்ந்து இதுக்கே உன்னாலே தாங்க முடியலையா, அப்போ நீ பறந்த மாதிரி தானு கேலி செய்தது

அதைக்கேட்ட யானை கோபத்தில அடிக்க தும்பிக்கையை சுழற்றியதும் காக்கா பறந்து போய்கிட்டே, உன்னாலே என்னை ஒண்ணும் பண்ண முடியாது, எனக்கு ரெக்கை இருக்கு, உனக்கு ரெக்கையில்லைனு சொல்லிச்சி,
யானைக்கு கோபம் அதிகமாகி கத்தியது,

அதைக்கேட்ட கழுகு கிட்டே வந்து சொன்னது,

' ஏன் அண்ணே கோபபடுறே, பறக்கிறது சாதாரண விஷயம் தான், அதுக்கு நீ என்ன செய்யணும்னா, அதோ தெரியுதே உயரமான மலை, அது மேலே ஏறு. உச்சிக்குப் போனதும், அங்கே இருந்து நான் பறக்கணும்னு சொல்லிகிட்டே கண்ணை மூடிக்கிட்டு குதி, தானா பறந்துடுவே என்றது.

யானைக்கு அப்படி குதித்தால் பறக்கமுடியுமா என்று தயக்கமாக இருந்த்து, கழுகு சொன்னது

என்னை நம்புனா, உடனே நீ பறந்துடலாம் என்றது

யானை மூச்சுவாங்க மலை மேல ஏற ஆரம்பிச்சது, உச்சிக்கு போறதுக்கு முன்னாடி மூச்சு தள்ளிப்போச்சி, அங்கேயிருந்து கிழே பார்த்தா அவ்வளவு பெரிய காடு மரம் எல்லாம் குட்டியா தெரியுது, கண்ணை மூடிகிட்டு கிழே குதிக்க எட்டி பார்த்தா தலை சுத்துச்சி, வேற வழியில்லை என்று குதிக்க போகும் போது குருவி பறந்து வந்து சொன்னது

யானை அண்ணே, இங்கே இருந்து குதிச்சா நீங்க காலி, இவ்வளவு உயரத்துல இருந்து பாருங்க காடுங்கிறது எவ்வளவு அழகா இருக்கு, இதுக்குள்ளே ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு, இதுல யாருமே பெரிய ஆளும் இல்லை, யாரும் சின்ன ஆளும் இல்லை,

இந்த காடு மனுசன் உண்டாக்கினது இல்லே, காலம் காலமாக இருந்துகிட்டே வர்ற இயற்கை, உங்களாலே பறக்க முடியாது, என்னால சின்ன கல்லைக் கூட தூக்க முடியாது, அவங்க அவங்க பலம் திறமை அவங்களுக்கு, இப்போ கூட ஒண்ணும் ஆகிடலை, நாம நட்பாக இருக்கிறதா இருந்தா போட்டியே வேண்டாம் என்றது

யானை யோசித்துப் பார்த்தது,

குருவி சொல்றது சரி தான், நம்மாலே பறக்கமுடியாது, குருவியாலே மரத்தை தூக்கமுடியாது, நாம ஏன் தேவையில்லாமல் அது கூட போட்டி போடணும்னு நினைச்சது, சே நான் தான் பெரிய ஆளுனு திமிரா நடந்துகிட்டேன், நாம இனிமே நண்பர்கள் ஆகிறலாம்னு சொல்லிச்சி குருவியும் அதை ஏத்துகிடுச்சி,
அன்று முதல் யானையும் சிட்டுக் குருவியும் காட்ல நண்பர்களாக இருந்தார்கள்.

நாம எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், நம்மால முடியாத ஒரு விஷயம், இன்னொருவரால் லேசாக செய்ய முடியும். அதனால், யாரையுமே நாம அலட்சியமா நினைக்கக் கூடாது. எல்லோர் கிட்டேயும் அன்பாகவும் நட்பாகவும் நடந்துக்கணும்
#84
ஆசை யாரை விட்டது. புத்தர் கூட ஆசைப்பட்டார் ஆசையை ஒழிப்பதற்கு...

இங்கே ஒருவர் பேராசைப்பட்டார் என்ன நடக்கிறது என்று பாருங்கள்...

#85
ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார்.

பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.

மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான். ""நாம அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்" பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். ""அப்பா...அப்பா... " என்றான் பையன். ""என்னடா?" கோபத்துடன் கேட்டார். "இந்தக் காட்டாறு எங்கே போகுது?" ""நம்ம வீட்டுக்குத்தான்"

பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை. மாலை நேரம் ஆனது. மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு ""வா, போகலாம். நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைச்சிருக்க?" என்று கேட்டார்.

பையன் சொன்னான்: ""நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன். இந்நேரம் அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்..!' ன்னும் பொறுமையா பதில் சொன்னான் செல்ல மகன்

இளம் வயது குழந்தைகளுக்கு சொல்லுவதை திருந்த சொல்லுங்கள். சரியாக சொல்லுங்கள்
#86
ஒரு பள்ளி ஆசிரியர் வண்ணப் புத்தகத்தில் யானையின் படத்தை வரைந்து கொண்டு வந்து, அதை சுட்டிக் காட்டி "இது என்ன?" என்று மாணவர்களைக் கேட்டார்.

சின்னக் குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியான குரலில் "யானை!", "யானை!" என்றார்கள். அவர்களை பாராட்டி விட்டு அடுத்த வகுப்பை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு சின்ன குழந்தையின் அறிவு ஆசிரியரின் அறிவை அறியாமையாக்கியது.

ஒரே ஒரு சின்ன குழந்தை எழுந்து, "ஐயா, அது யானை அல்ல... யானையின் படம் என்றது". ஐம்பது வயது மூளை அப்படியே அமைதியாகி போனது! உண்மை தானே. பிஞ்சு மூளையில் உதித்த அறிவு தமது அறியாமையை ஆசிரியருக்கு உணர்த்தியது.

"படிப்பாலும் கல்வியறிவாலும் வருகிற அகங்காரம் இருக்கிறதே அது அழியாது! இந்த அறிவு வெறும் அறியாமை என்று அடுத்தவர் அறிவால் அடிவாங்கினால் ஒழிய, இது ஒழியாது".

ஆகையால் நாம் இந்த‌ துன்ப‌த்திற்கு ஆளாகாம‌ல் அகங்கார‌ம் இன்றி வாழ்ந்திடுவோம்!
#87

ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது.ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.

கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர்.

ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.

தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்ல்லை.ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.
மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர்.தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது.

தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.

மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.
#88
பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.
#89
ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அது' நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன.


அப்போது இறைவன், "தேவதைகளே! இந்த ஊரில் போய் யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்" என்றார்.
உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.

ஒருவன், "நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்," என்றான்.

அடுத்தவன், "நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்," என்றான்.

மற்றவன், "நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்," என்றான்.

இன்னொருவன், "எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்," என்றான்.

இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, "இதில் யார் உண்மையான பக்தன்' எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.

அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, "அய்யனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது.

அதற்கு அவன், "எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...'' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.

தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.
எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.

"தேவனே... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?'' என்று கேட்டன.

"கண்டுபிடித்துவிட்டேன்!'' என்றார் கடவுள்.

"யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?'' என்று கேட்டன தேவதை கள்.

கடவுள் புன்னகைத்தபடியே, "இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,'' என்றார்.

உண்மை புரிந்தது தேவதைகளுக்கு.
#90
மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.


அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.

பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.