தந்தை சொல்!

Started by Administrator, May 01, 2024, 03:17 PM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

Administrator

ஒரு குடும்பம்; ஒரு வாரிசு என்பது நாட்டுக்கும், வீட்டுக்கும் நல்லது தான் என்றாலும், சில விஷயங்களில், இதுவே, பெரிய பிரச்னையை ஏற்படுத்திவிடுகிறது.

தான் பட்ட கஷ்டம், தன் மகனோ, மகளோ படக்கூடாது என்ற எண்ணம், பல பெற்றோரிடையே உண்டு. இப்போதெல்லாம், ப்ளஸ்டூக்கு வந்தவுடனேயே பிள்ளைகளும், எல்லாமே நமக்குத்தான் என்று, உணர்ந்து விடுகின்றனர்.
சிவராமன், தன் மகன் பிரபுவை உட்கார வைத்து, ""பிரபு, உனக்கு, லீவு விட்டாச்சுல்ல... வீட்ல, "டிவி' இருக்கு; ஹாய்யா உட்கார்ந்து கிரிக்கெட் மேட்ச் பாரேன். எதுக்கு பிரெண்ட்ஸ் கூட, ஸ்டேடியத்துக்கு போகணும்கிற... சரி டிக்கெட் நூறு, இருநூறுன்னா பரவாயில்லை, மினிமம் ஆயிரம் ரூபாய்ங்குறான். இப்ப எல்லாமே டே, நைட் மேட்ச்சா போச்சு. மேட்ச் முடிஞ்சு, ராத்திரி எப்படி திரும்புவ? நண்பர்களோட வண்டியில வர்றது ஆபத்தில்லியா... உன்னை அனுப்பிட்டு, நாங்க கவலையோட உட்கார்ந்து இருக்கணுமா?''

பிரபு, அப்பாவை வெறுப்போடு பார்த்தான். எத்தனை பேருக்கு, சென்னையில் வாழ வாய்ப்பிருக்கு. அப்படி இருந்தும், ஒரு மேட்சை கூட நேரடியாக பாக்க முடியவில்லை என்றால்... அப்பா, அம்மா சொல்படி நன்றாகத்தானே படிக்கிறோம். பிறகு, ஏன் கொஞ்சம் செலவு செய்து, ஒரு மேட்ச்சிற்கு, அனுப்ப மறுக்கின்றனர். நண்பர்கள், ஸ்டேடியத்தில் அமர்ந்து, நேராக தோனியையும், ரெய்னாவையும் பார்த்தது பற்றி, பரவசமாக விவரிக்கும்போது, எவ்வளவு ஆவல் வருகிறது. அவங்க, அப்பா, அம்மா மட்டும், எப்படி அனுமதிக்கின்றனர்! எனக்காக, ஒரு ஆயிரம் ரூபாய் செலவழிக்க கூடாதா... கேட்டால், "இந்த வீடு, ஆஸ்தி எல்லாமே உனக்குத்தானே' என்று உருகுகின்றனர். அதேநேரம், ஒரு டீன்-ஏஜ் பையனின் ஆசையை, புரிந்து கொள்ள மறுக்கின்றனரே...
அவன் மனதில் ஓடியதை, சிவராமன் புரிந்து கொண்டார்...

""பிரபு, நீ என்ன நினைக்கிறன்னு புரியுது. உன் நண்பர்களை எல்லாம் மேட்ச் பார்க்க, அவங்க பெற்றோர் அனுப்புகையில், நம்மை ஏன் அப்பா அனுப்ப மறுக்கிறார்ன்னு நினைக்கிற அப்பா. அவங்களோட "கம்பேர்' பண்ணி பார்க்காதே. எவ்வளவோ பேர் நேர்ல பாக்காம, வீட்ல உட்கார்ந்து பாக்கறாங்க. அத நெனைச்சி பாரு. ஆயிரம் ரூபாய் கொடுத்து, ஸ்டேடியத்துக்கு போறது ரொம்ப அதிகம். நான் அனுமதிக்க மாட்டேன்,'' என, கறாராக சொல்லிவிட்டு, ஆபீசுக்கு கிளம்பினார் சிவராமன். "சே...' பிரபு, எதிரில் இருந்த சுவற்றை காலால் உதைத்தான். பிறகு மென்மையாக அழுதான். இயலாமையும், கோபமும் இணைந்து கொண்டதன் விளைவு.
அம்மா பார்வதிக்கு, அவனைப் பார்க்க பாவமாக இருந்தது. ஆனால், கணவனிடம் சொல்ல முடியாது, "என்ன புள்ளைக்கு சப்போர்ட்டா...' என்று, உறுமுவார்.ஐந்து நிமிடம், அப்படியே உட்கார்ந்திருந்தான் பிரபு. "ஏண்டா... உங்க வீட்டுல அனுப்ப மாட்டேன்னுட்டாங்களா...' நண்பர்கள் ஏளனம் செய்தால், என்ன பதில் சொல்வது என்று நினைக்கும்போது, இன்னும் அழுகை வந்தது.
"
டேய் பிரபு, வந்து சாப்டுடா. நான் வேணா அப்பா கிட்ட சொல்லிப் பாக்கறேன்,'' என்று பார்வதி சொல்ல, பிரபு சட்டை செய்யவில்லை. அம்மா ஆறுதலுக்கு சொல்கிறாள் என்பது, பிரபுவுக்கு தெரியும். இந்த வீட்டில், அப்பா தான் எல்லாமும்.
வாசலில், "பைக்' சத்தம் கேட்டது. வருவது முரளி மாமா. அவசர அவசரமாக கண்களை துடைத்துக் கொண்டான் பிரபு.
பார்வதி வெளியில் வந்து, ""வாடா,'' என, தம்பியை வரவேற்றாள். மாமா, வீட்டிற்குள் நுழையும் போதே, பிரபுவை கவனித்து, ""ம்... என்ன மாப்ள, கண்ணு சிவந்து, முகம் வீங்கியிருக்கு?'' என்று கேட்டான். பிரபுவுக்கு வெட்கமாக இருந்தது; தலையை குனிந்து கொண்டான்.விஷயத்தை சொன்னாள் பார்வதி.

"என்னக்கா, இந்த மாமா பண்றது சரியில்லையே... ஒரே பையன். சில பேருமாதிரி, கண்ட கண்ட சினிமாவுக்கு போகணும்ன்னா கேட்குறான். கிரிக்கெட் மேட்ச் தானே. அனுப்பினா என்ன? ஆயிரம் ரூபா பெரிய தொகையா? புள்ளையோட சந்தோஷத்துக்கு ஈடு வருமா... இந்த வயசுல ஒவ்வொருத்தன் என்னமா அனுவிக்கிறான். இந்தாளு என்னமோ, வீட்லலேய ஓசியில, "டிவி'ல பாரு, அது, இதுன்னு, "அட்வைஸ்' பண்றாரு.''

முரளியும் புலம்பினான். ஆனாலும், அதை சிவராமனிடம் சொல்ல முடியாது. சிவராமனின் கண்டிப்பு அவனுக்கு தெரியும்.
""டேய் மாப்ள... எழுந்திருடா. எங்கூடவா,'' என்ற முரளி, பிரபுவின் தோள் அணைத்து, வெளியே கூட்டிச் சென்றான். இருவரும், ஒரு கூல்டிரிங்ஸ் கடையில், பாதாம் பால் குடித்தனர்.""டேய்... நீ ஆம்பளடா அழாத. தைரியமா இரு. நான் ஒரு ஐடியா சொல்றேன்... கேக்கறியா?''""என்ன மாமா?''""என்ன மேட்ச் அது. யாருகூட இந்தியா விளையாடுது?''

""பாகிஸ்தான் கூட மாமா. ரொம்ப த்ரில்ரிலிங்கா இருக்கும். வர்ற சனிக்கிழமை, டொன்டி டொன்டி மேட்ச் மாமா,'' கிரிக்கெட் பத்தி பேசும்போதே, குஷியானான் பிரபு.""கவலையை விடு. அன்னிக்கு நீ மேட்ச் பாக்கற. என்ன சந்தோஷமா!'' தடாலடியாக மாமா சொன்னதும், ஆச்சரியமாக கண் விரித்து, ""மாமா...'' என்றான்.""ஆமாண்டா. ஆனா, உங்கப்பாகிட்ட மூச்சு விடாத. இரண்டு நாளைக்கு முன்னாடியே, என் வீட்டுக்கு வந்துரு. நான் பார்த்துக்கிறேன்,'' என, தைரியம் சொன்னான் முரளி.

பிரபுவுக்கு பயம். இதுவரை, அவன், தன் அப்பாவுக்கு தெரியாமல், எதுவும் செய்ததில்லை. ""மாமா, அப்பாகிட்ட சொல்லாம இருக்கிறது, தப்புன்னு தோணுது மாமா. அப்புறம் தெரிஞ்சா கோபப்படுவார்... வேண்டாம் மாமா.''
""அட போடா பயந்தாங்கொள்ளி பயலே. உன் வயசு பசங்க எல்லாம், கில்லாடியா இருக்காங்க. நீ, என்ன வோ....'' என, மாமா வெறியேத்த, பிரபு நினைத்துப் பார்த்தான். ஸ்கிரீன் முழுவதும் பெரிதாக டென், நைன் என்று வினாடிகள் குறைய, கடைசியா ஸ்டேடியமே அதிரும் குரலை, "டிவி'யில் பார்ப்பதே பரவசமாக இருக்கிறது. நேரில் பார்த்தால், எப்படி இருக்கும்... பிரபு, கனவில் மிதக்க ஆரம்பித்தான் . ""சரி மாமா அப்பாகிட்ட சொல்லல. ஒரு வேளை தெரிஞ்சுட்டா?'' என்ற பிரபுவை, தட்டிக் கொடுத்து, ""நான் பாத்துகக்றேன்டா,'' என்றான் முரளி.அன்றிரவு, பிரபு சாதாரணமாக இருந்தது கண்டு, சிவராமன் யோசித்தார்.""என்னடி, பையன் சைலன்ட்டா இருக்கான்?''""ம்... அவன் மாமா வந்து ஏதோ சொன்னான்...'' பார்வதி ஒற்றை வரியில், முடித்துக் கொண்டாள்.

சிவராமன், மெதுவாக பிரபு அருகில் வந்து அமர்ந்து, ""டேய்...பிரபு, நீ எனக்கு உயிர்டா. உனக்கு, எது எது, எந்த எந்த நேரத்துல செய்யனும்ன்னு எனக்கு தெரியும்டா. எல்லாமே, அத அனுபவிக்கிற வரைக்கும்தான்டா பெரிய கிரேஸ் இருக்கும். கிரவுண்ட்ல, ரீப்ளே பார்க்க முடியுமா; பல ஆங்கிள்ல, நல்ல குளோசப்புல, ஹாய்யா படுத்துகிட்டு பார்க்க முடியுமா...என்ன ஒரு கூட்டம்! அந்த லைட் வெளிச்சத்தையும், உற்சாகத்தையும் எவ்வளவு நேரம் நீ அனுபவிப்ப... ம்... அதுக்கு ஆயிரம் ரூபாய்ங்கிறது ரொம்ப அதிகம் கண்ணு. புரிஞ்சுக்க. நமக்கு பணம் என்ன கண்டபடியா வருது? ஏதோ, மிடில் கிளாஸ் வாழ்க்கைய அனுபவிக்கிறோம். நீ, ஒண்ணும் எதுவுமே அனுபவிக்காத பையன் இல்லையே. இதுதான் உச்சம்ன்னு, ரொம்ப ஆசப்படாதடா. லைப்ல எவ்வளவோ இருக்கு,'' என்று அப்பா பேச, பிரபு வெளியில் பொறுமையாகவும், உள்ளே கிண்டலுமாக கேட்டுக் கொண்டிருந்தவன், பின்...
""அப்பா இன்னிக்கு மாமா வந்தாரு. நான் டல்லா இருந்தத பார்த்து, வீட்டுக்கு கூப்பிட்டாரு. போகட்டுமாம்ப்பா?'' அப்பாவியாக கேட்டான்.

சிவராமன் சில நொடிகள் யோசித்து, ""ம்... ரொம்ப நாள் வேண்டாம். ஒரு இரண்டு நாள் போதும். அங்க போய், இங்க கேட்டா மாதிரி, மேட்ச் கீட்ச்ன்னு தொந்தரவு செய்யக் கூடாது. சரியா? "டிவி'யிலேயே பார்த்துக்கணும் என்ன?''
""சரிப்பா... சும்மா ஜாலியா இருந்துட்டு வந்துடுவேன்பா,'' என்றவன், ""வெள்ளிக்கிழமை போயிட்டு, ஞாயிற்றுக் கிழமை வந்துடுறேன்பா. சரியா?''பிரபுவின் தலையை, ஆசையாக தடவினார் சிவராமன்.சனிக்கிழமை...

ஸ்டேடியம், ஒளி வெள்ளத்தில் மிதந்தது. தமிழ் குத்து பாட்டுக்கள் அதிர்ந்தன. ப்ராக்டிஸ் செய்து கொண்டிருக்கும் வீரர்களைப் பார்த்து, பார்வையாளர்கள் ஒலியெழுப்புவதும், அதில், ஒரு சில வீரர்கள் திரும்ப கையசைப்பதும், பிரபுவுக்கு, ஏதோ சொர்க்கத்தில் மிதப்பது போல் இருந்தது. உட்கார சேர் இருந்தாலும், கூட்டத்தில் யாரும் உட்காரவில்லை. மேட்ச் ஆரம்பமானது. இந்தியா பேட் செய்வதாக சொல்ல, விசில் விண்ணை தொட்டது. தொடர்ந்து சிக்சர், போர் என்று இந்தியா விளாச... அரங்கமே ஆர்ப்பரித்தது. பதிலுக்கு, பாகிஸ்தான் ரன்களை குவித்த போது, பிரபுவுடன் சேர்ந்து, அரங்கமும் அமைதி காத்தது. அதே சமயம், பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழக்க, பூமியே பிளந்தது போல் சத்தம் அதிர்ந்தது. பிரபு இந்த அனுபவத்தால், தன்னை அழைத்து வந்த மாமாவை, பலமுறை கட்டிப் பிடித்துக் கொண்டான்.

ஆட்டம், கடைசி பந்து வரை நீடித்தது. ஒரு பந்தில், இரண்டு ரன்கள் எடுத்தால், வெற்றி. ஒரு ரன் எடுத்தால் டை. பேட்ஸ்மேன் அவுட்டானால், இந்தியா வெற்றி என்ற நிலையில், கடைசி பந்து போடப்பட்டது. பாகிஸ்தான் வீரர் தூக்கி அடிக்க, அது, எளிதான கேட்சாக மாற, இந்தியா ஜெயிக்க... பிரபு நான்கடி எம்பி குதித்தான். அந்த வயதில், அந்த உற்சாகம், அவன், அதுவரை அனுபவிக்காத ஒன்றாக இருந்தது.

""பிரபு... மாமா வீட்ல ரெண்டு நாளா என்ன செய்த?'' என்று கேட்டார் சிவராமன்.
""ம்... கேரம்போர்டு விளையாடினேன்பா; அப்புறம் பீச் போனோம்; சினிமாவுக்கு கூப்பிட்டாரு போகல.''
""ஏன் "டிவி'யில மேட்ச் பார்க்கலயா?''
"" ம்...'' பிரபு நெளிந்தான். ஒருவேளை அப்பா தெரிந்து கொண்டு கேட்கிறாரோ... நாம், அம்மாவுக்கு கூட சொல்லவில்லையே!
""இல்லப்பா, உங்களுக்கு பிடிக்கலை. அது தான் மேட்ச் பார்கிறதையே விட்டுட்டேன்,'' பிரபு சொல்ல, ""ம்...என்னமோ அதிசயமா இருக்கு,'' என, அப்பா சொல்லி விட்டு, வேறு வேலையை பார்க்க போனார்.

அடுத்த நாள் காலை, பிரபுவை அவசரமாக எழுப்பினார் அப்பா.""பிரபு... பிரபு''""என்னப்பா?'' எழுந்தான். ""போய், பல் தேச்சு, முகம் கழுவிட்டு வா?'' விரட்டினார்.""எதுக்குப்பா,லீவு நாள் தானே?''""அட போடா, ஒரு முக்கியமான விஷயம்! ம்... போ,'' அப்பா மேலும் விரட்டினார். பிரபு பத்து நிமிடத்தில், துண்டால் முகம் துடைத்து, அப்பா எதிரில் வந்து அமர்ந்தான்.அன்றைய செய்தித்தாளை காண்பித்து, "" இங்க பாருடா, கிரிக்கெட் சூதாட்டம்... வாசிம் ஜமால் கைது!'' படித்ததும் திடுக்கிட்டான் பிரபு. இவன்... அன்று மேட்சில், கடைசி பந்தில், அவுட் ஆன பாகிஸ்தான் பிளேயராச்சே!

சுவாரஸ்யமாக, பேப்பரை வாங்கி படித்துப் பார்த்தான். அவன் படிக்கும் வரை, அப்பா பொறுமையாக இருந்தார். படித்து முடித்து, வியப்பு அகலாமல், அதிர்ச்சியில் இருந்தான் பிரபு. அந்த வெற்றி ரன்னை எடுத்தால், ஜமாலின் தனிப்பட்ட ஸ்கோர், ஐம்பது ஆகும் என்பதால், அது கூடாது என்பதற்காக, வேண்டுமென்றே அவுட்டாகி விட்டான். எல்லாம் ஆதாரத்துடன் வெளியாகியிருந்தது.
""பாத்தியா பிரபு... உன்மாதிரி ரசிகருங்க, "மேட்ச் மேட்ச்'ன்னு துடிக்கறீங்க... அவன் என்னாடான்னா, காச வாங்கிக்கிட்டு, செட்டப் பண்ணி விளையாடி, மேட்ச் பாக்கற எல்லாரையும் ஏமாத்தி, முட்டாளாக்குறான். அந்த கிரவுண்டுல அந்த ஜமால், "அவுட்' ஆனதும் குதிச்சிருப்பாங்க. ஆனா, அவன் மட்டும் சிரிச்சிருப்பான். ரசிகருங்க காட்டுற சந்தோஷம் பொய்யா போச்சு பாத்தியா?

""எத்தனை பேர் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்துல, டிக்கெட் வாங்கி, நாட்டுப்பற்றோட வெறியா ஆட்டத்த பாக்குறாங்க. எது உண்மை, எது பொய்ன்னு புரியாம ரசிக்கிறாங்களே அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! சினிமா கூட பொய் தான். ஆனா, தெரிஞ்சு பாக்குறோம். இந்த கிரிக்கெட்... யாரோ பெட்டிங்ல சம்பாதிக்க, விளையாட்டு வீரர்களை, தங்கள் இஷ்டப்படி ஆட வைக்குறாங்க. இன்னிக்கு, அந்த ஜமால் கைது ஆயிருக்கான், நாளைக்கே ஜாம் ஜாமுன்னு வெளியில வந்துருவான். இதெல்லாம் மறந்திடும். உங்களை மாதிரி ஆட்கள் தொடர்ந்து ஏமாறுவீங்க!

""ஆனாலும், நீ, என் பேச்சை மதிச்சு, மேட்சுக்கு போகாம இருந்த. இல்லன்னா, நீயும் முட்டாளா ஆயிருப்ப. இதுலேந்து புரிஞ்சுக்க. அப்பா பேச்சை கேட்டா, எல்லாம் நல்லா விதமாகத்தான் முடியும்,'' என்று சொல்லி, பிரபுவை ஆழமாக பார்த்தார் சிவராமன். பிரபுவிற்கு, உள்ளுக்குள், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி, ஏமாற்றத்தை விட, அப்பா, தன் மீது வைத்திருக்கும் அபார நம்பிக்கை, அவனை நிலைகுலைய செய்தது.மேலும், அப்பாவை ஏமாற்றி, ஒரு பித்தலாட்ட ஆட்டத்தை, ரசிக்க வைத்து, தன்னை ஏமாற்றிய, அந்த கிரிக்கெட்டை நினைத்துப் பார்த்தான்.

விளையாட்டு என்பது வாழ்க்கை அல்ல. ஆனால், அந்த விளையாட்டில் கூட, சூது விளையாடுகிறது. "தன் மீது உயிரையே வைத்திருக்கும் அப்பாவின் பேச்சை கேட்காமல், பொய் சொல்லி, ஒரு, "செட்டப்' ஆட்டத்தை கண்டு களித்தோமே, சே...' என்று, தன்னை தானே நொந்து கொண்டான் பிரபு.உடனே, அப்பாவிடம் உண்மையை கூறி, மன்னிப்பு கேட்க விரும்பினான். ஆனால் பொய் சொல்லியதை, அப்பாவால் ஜீரணிக்க முடியாது என்பது புரிந்தது. "அப்பாவை, இனிமேல், சிறிதும் வருத்தப்பட வைக்க கூடாது...' என்று நினைத்தான்.""ஏன்டா ஒரு மாதிரியா பாக்குற?'' சிவராமன் கேட்டார்.

"சாரிப்பா...'' என, பிரபு சொன்னான்.""எதுக்குடா... நீ என்ன தப்பு பண்ண?''""உங்ககிட்ட பிடிவாதமாக பேசினதுக்குப்பா. இனிமே உங்க மனசுப்படி நடந்துக்குறேன்பா.''சிவராமன் சிரித்தபடி, எழுந்து போனார்.அந்த செய்தித்தாளை சுட்டெரிப்பது போல் பார்த்தான் பிரபு. பின், எழுந்து, தன் அலமாரி நோக்கிச் சென்றவன், நண்பர்களிடம் காட்டி, பெருமைப்பட வைத்திருந்த, டிக்கெட்டை எடுத்து, சுக்குநூறாக கிழித்து எறிந்தான்.