செய்யக்கூடாததும் செய்யவேண்டியதும்

Started by nite owl, Jan 17, 2024, 09:41 AM

Previous topic - Next topic

0 Members and 1 Guest are viewing this topic.

nite owl

சில ஆண்டுகளுக்கு முன்பாக நியூயார்க் நகரில் உள்ள ஒரு பிரபல ஆலயத்தில் போதிப்பதற்காக மறைபோதகர் ஒருவர் அழைப்புப் பெற்றிருந்தார். அவர் 'பிறருடைய உடமையை, பொருளைத் திருடக்கூடாது' என்ற தலைப்பில் அற்புதமாக மறைபோதனை செய்தார். மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தார்கள்.

அந்த மறைபோதகர் தன்னுடைய போதனையை முடித்துக்கொண்டு, தன்னுடைய இருப்பிடம் செல்வதற்காக பேருந்து ஒன்றில் பயணமானார். அந்த பேருந்தில் சரியான கூட்டம், நிற்பதற்குக்கூட இடமில்லை. மறைபோதகர் எப்படியோ  பேருந்துக்குள் நுழைந்து, ஓர் மூலையில்போய் நின்றுகொண்டார். பின்னர் ஒரு டாலர் பணத்தை எடுத்து, பயணச்சீட்டு வாங்கிக்கொண்டார். பயணச்சீட்டு போக மீத பணத்தை பேருந்து நடத்துனர் மறைபோதகரிடம் கொடுத்துவிட்டு, தன்னுடைய இருக்கையில் போய் அமர்ந்துகொண்டார். மறைபோதகர் நடத்துனர் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது, அது சிறிது அதிகமாகவே பணம் இருந்தது.

உடனே அவர் நடத்துனரிடம் சென்று அதிகமாகக் கொடுக்கப்பட்ட பணத்தை அவரிடம கொடுத்து, "இந்தப் பணம் அதிகமாகக் கொடுக்கப்பட்ட பணம். இதை வைத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டுத் திரும்பினார். அப்போது அந்த பேருந்து நடந்துனர் மறைபோதகரிடம், "நான் தெரிந்தேதான் சிறுது அதிகமான பணத்தை உங்களிடம் கொடுத்தேன். ஏனென்றால் நேற்று ஆலயத்திற்கு வந்திருந்திருந்தேன். அப்போது நீங்கள்தான் மறைபோதனை செய்தீர்கள். அந்தப் போதனையில் 'பிறருடைய பொருளை, உடைமையைத் திருடக்கூடாது' என்று போதித்தீர்கள். நீங்கள் போதித்ததற்கு ஏற்ப வாழ்கிறீர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத்தான் நான் சிறுது அதிகமான பணத்தை உங்களிடம் கொடுத்தேன். ஆனால் நீங்கள் அதிகமான பணத்தை என்னிடம் கொடுத்து, நான் வைத்த சோதனையில் நீங்கள் வெற்றிக்கொண்டுவிட்டீர்கள். ஒருவேளை நீங்கள் மட்டும் நான் அதிகமாகக் பணத்தை என்னிடம் திருப்பித் தந்திராவிட்டால் 'இவர்கள் போதிப்பார்கள், ஆனால் செயலில் காட்டமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்திருப்பேன்' என்றார்.

எல்லாவற்றையும் கேட்டபிறகு மறைபோதகர் நடத்துனரிடம், "நான் கடைப்பிடிக்காத எதையும், மக்களுக்குப் போதிக்கமட்டேன்" என்றார். போதித்ததை வாழ்வாக்க வேண்டும் அதுதான் உண்மையான போதனை என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.  மத்தேயு 23: 1-12, இறைவாக்கினர் மலாக்கி  1: 14 - 2: 1-2,8-10 & திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 2: 7-9,13 வாசகங்கள் 'செய்யக்கூடாததும் செய்யவேண்டியதும்' என்ற சிந்தனையை வழங்குகின்றது. நாம் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களுக்கு எதிரான தனது கண்டக்குரலைப் பதிவு செய்கின்றார். இந்தப் பகுதியிலிருந்து நாம் என்னென்ன செய்யக்கூடாது, என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்த தெளிவினைப் பெறுகின்றோம்.

நற்செய்தியில் இயேசு மக்களையும் சீடர்களையும் பார்த்துக் கூறுகின்றார், "பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ, அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில், அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்" என்று. ஆம், பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் போதித்தார்கள். ஆனால், அவர்கள் அதை தங்களுடைய வாழ்வில் வாழ்ந்து காட்டவில்லை. இது மிகப்பெரிய போலித்தனம். இப்படிப்பட்ட ஒரு போலித்தனத்தை நம்முடைய வாழ்வில் செய்யக்கூடாது என்பதுதான் இயேசுவின் போதனையாக இருக்கின்றது.

நிறைய நேரங்களில் நாம் போதிக்கின்றாம் அல்லது இறைவார்த்தையை நாம் வாசிக்கின்றோம். ஆனால் அந்த போதனைக் கேற்ப, இறைவார்த்தை வாசிப்பிற்கேற்ப நம்முடைய வாழ்வு இராததுதன் மிகப்பெரிய அபத்தமாக இருக்கின்றது. 'போதனையும் வாழ்வும் அல்லது இறைவார்த்தை வாசிப்பும், வாழ்வும் ஒத்துப்போகாதது இயேசுவைப் பொறுத்தளவில் மிகப்பெரிய குற்றம்தான். மத்தேயு இயேசுகூறுவார், "என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்" என்று (மத் 7: 21). எனவே நாம் போதிப்பது ஒன்றாகவும், வாழ்வது ஒன்றாகவும் இல்லாமல், போதனையும், வாழ்வும் ஒத்துப்போகும்படி வாழ்வோம்.

அடுத்ததாக இயேசு பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைக் கடிந்துகொள்வதற்குக் காரணம் அவர்களின் வெளிவேடத்தனமான வாழ்வாகும். குறிப்பாக அவர்கள் எதைச் செய்ததாலும் மக்கள் பார்க்கவேண்டுமென்ற செய்தார்கள். அது தான தர்மமாக இருக்கட்டும், இறைவேண்டுதலாக இருக்கட்டும் எல்லாவற்றையும் அவர்கள் மக்கள் பார்க்கவேண்டும், தங்களைப் புகழவேண்டும் என்று செய்தார்கள். ஆனால் ஆண்டவர் இயேசுவின் போதனையோ இதற்கு முற்றிலும் மாறானதாக இருக்கின்றது. இயேசு கூறுகின்றார், "நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது, உங்கள் உள்ளறைக்குச் சென்று வேண்டுங்கள்" (மத் 6:6), நீங்கள் தர்மம் செய்யும்போது 'உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாத அளவில் செய்யுங்கள்" ( மத் 6:3)என்று. ஆகவே, நாம் எதைச் செய்தாலும் பரிசேயர்கள் மறைநூல் அறிஞர்களைப் போன்று மக்கள் பார்க்கவேண்டுமென்றோ அல்லது விளம்பரத்திற்காகச் செய்யாமல், உள்ளார்ந்த அன்போடு செய்வோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக (2015 ஆண்டு, ஆகஸ்டு 09 ம் நாள்) பத்திரிகையில் வந்த செய்தி: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி தன் தாயுடன் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நின்றுகொண்டு அண்ணா அரங்கம் எங்கு உள்ளது என தேடிக் கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட ஒருவர் விசாரித்த போது, அவர்கள் கோவையில் உள்ள அண்ணா அரங்கத்திற்கு செல்வதற்கு பதிலாக சென்னைக்கு வந்தது தெரியவந்தது.

இதனைக் கேட்டறிந்த மாணவியும் அவரின் தாயும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்தத் தாயானவள், தனது மகள் பன்னிரெண்டாம் வகுப்பில் 1,017 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், இளங்கலை வேளாண்மை பிரிவிற்கு கலந்தாய்வுக்கு வந்துள்ளதாக அவரிடம் தெரிவித்தார்.  இதனையடுத்து, அந்த நபர் தாய் மற்றும் மகளை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று தனது சொந்த செலவில் விமான பயணச்சீட்டு எடுத்து இருவரையும் கோவைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் கோவை சென்றவர்கள் மதியம் 12 மணிக்கு கலந்தாய்வில் கலந்து கொண்டு இளங்கலை பயோ டெக்னாலஜி பிரிவை தேர்வு செய்தனர். மாணவி மற்றும் அவரின் தாயார், தனக்கு உதவிசெய்த நபர் யார் என்று தெரியாமல் அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இப்படியும் யாருக்குமே தெரியாமல், எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் உதவிசெய்யும் நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள்தான் இயேசுவின் போதனைப்படி வாழக்கூடியவர்கள். நாம் இவர்களைப் போன்று வாழவேண்டும், பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் போன்று அல்ல.

மூன்றாவதாக இயேசு பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைச் சாடுவதற்குக் காரணம் அவர்களது ஆணவம்தான். "விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகிறார்கள்" என்று இயேசு அவர்களைக் கடிந்துகொள்கிறார். பல நேரங்களில் நாமும் அவர்களைப் போன்று முதன்மையான இடங்களைப் பெறவேண்டும், முதன்மையான இடங்களை வகிக்கவேண்டும் என்ற ஆணவத்தோடு செயல்படுகின்றோம். ஆனால் ஆண்டவர் ஆணவத்தை அல்ல தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்று விரும்புகிறார். அதனால்தான் அவர், "உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்கட்டும், அப்படித் தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார்" என்கிறார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் ஆணவத்தையும் அகங்காரத்தையும் அல்ல, தாழ்ச்சியையும் பணிவையும் நமது வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டும். ஏனென்றால் தாழ்ச்சி என்ற விதையிலிருந்துதான் எல்லா மரமும் பிறக்கின்றது (தமிழருவி மணியன்). நாம் தாழ்ச்சியோடு வாழும்போது இறைவனின் எல்லா ஆசிரையும் பெற்றுக்கொள்ள முடியும்.

நம்முடைய இந்தியத் திருநாட்டில் விடுதலைப் போராட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம். அப்பொழுது காந்தியடிகள் இரயிலில் ஓர் ஊருக்குப் போய்க்கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த இருக்கைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் வெற்றிலையை போட்டு, எச்சிலை வெளியே துப்பாமல், இரயில் பெட்டிக்குள்ளே துப்பினார். இதைப் பார்த்த காந்தியடிகள் எதுவும் பேசாமல் ஒரு துணியால் துடைத்தார். அவர் மீண்டுமாக எச்சிலை வெளியே துப்பாமல் இரயில் பெட்டுக்குள்ளே துப்பியபோதும் காந்தியடிகள் மிகுந்த பொறுமையோடும் தாழ்சியோடும் அதைத் துடைத்தெடுத்தார்.

அப்போது பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் அந்த மனிதரிடம், "எதற்காக எச்சிலை வெளியே துப்பாமல், இரயில் பெட்டுக்குள்ளே துப்புகிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், "இது என்னுடைய நாடு, இந்த இரயில் என்னவேண்டுமானாலும் செய்ய எனக்கு உரிமை இருக்கிறது" என்றார். உடனே அக்கம் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள், 'இது உன்னுடைய நாடுதான், இந்த இரயிலில் உனக்கு என்னவேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதுதான். ஆனால் நீ துப்புகிற எச்சிலை எல்லாம் துடைக்கின்ற மனிதர் யாரென்று தெரியுமா?, அவர் நம்முடைய தேசத் தந்தை காந்தியடிகள்" என்றார்கள்.

இதைக் கேட்ட அவர் பேச்சற்றுப் போனார். உடனே அவர் காந்தியடிகளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். காந்தியடிகள் பெருந்தன்மையோடு அவரை மன்னித்து ஏற்றுக்கொண்டார். இங்கே காந்தியடிகளின் பொறுமையும், தாழ்ச்சியும் தீச்செயலில் ஈடுபட்ட மனிதரை மனமாறச் செய்தது என்று சொன்னால் அது மிகையாகாது. பொறுப்புகளில் இருப்பவர்கள் ஏன், எல்லாருமே ஆணவத்தை அல்ல, தாழ்ச்சியைக் கொண்டு  வாழவேண்டும். அதுதான் ஒரு மனிதருக்கு அழகு சேர்க்கும்.

ஆகவே, இயேசுவின் சீடர்களாகிய நாம் போதிப்பது ஒன்றாகவும் வாழ்வது ஒன்றாகவும் அல்லாமல், போதித்ததை வாழ்வாக்குவோம், எதையும் விளம்பரத்திற்காக செய்யாமல், உள்ளார்ந்த அன்போடு செய்வோம். அதேபோன்று ஆணவத்தோடு அல்லாமல், தாழ்ச்சியோடு வாழப் பழகுவோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.